இந்திய அரசியல் சாசன சிற்பி, சட்டமேதை அண்ணல் டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு, திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் இன்று (டிசம்பர் 6) எழுச்சிப் பேரணி மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த எழுச்சிமிகு பேரணிக்கு திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் தலைமை தாங்கினார். பட்டியல் அணி வடக்கு மாவட்ட தலைவர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். பாஜகவின் பட்டியலணி மாநிலப் பொதுச் செயலாளர் தளபதி பிச்சையா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இந்நிகழ்வைச் சிறப்பித்தார்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பாகப் காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பிரம்மாண்டப் பேரணியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர்.
பேரணியானது நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலை அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திரண்டு வந்து, டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்குப் பூ மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் கலந்துகொண்ட மாநில நிர்வாகிகள் கூறும்போது , “சட்டத்தின் மூலம் சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலைநாட்டிய அண்ணல் அம்பேத்கரின் லட்சியங்களைப் பின்பற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் பாஜக எப்போதும் முன்னிலை வகிக்கும்” என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்டப் பொறுப்பாளர்கள், அணிப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு சட்டமேதைக்குத் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.