நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை: புகார் அளித்ததால் முதல்வர் ஆபாச கமெண்ட் ?? போலீசார் விசாரணை
புகழ்பெற்ற திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சுமிதாவே, தன்னை பாலியல்ரீதியாகப் பாதித்ததாக ஏற்கெனவே ஆட்சியரிடம் புகார் அளித்த மாணவி அஸ்வதியை, யூடியூப் தளத்தில் ஆபாச வார்த்தைகளால் மிரட்டும் நோக்கில் கமெண்ட் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இச்சூழலில், முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி அஸ்வதி, கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சுமிதா மற்றும் நிதியாளர் பிரியதர்ஷினி ஆகியோரால் தனக்கு ஏற்பட்ட வேறுபட்ட பாதிப்புகள் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இச்சம்பவம் குறித்து அனைத்து ஊடகங்களிலும், யூடியூப் பக்கங்களிலும் செய்திகள் விரிவாக வெளியானது.
மாணவி அஸ்வதி அளித்த பேட்டி குறித்த ஒரு யூடியூப் வீடியோவின் கமெண்ட் பகுதியில், தற்போதைய பொறுப்பு முதல்வராக உள்ள சுமிதாவின் பெயரில் இயங்கும் அக்கவுன்டில் இருந்து, மாணவி அஸ்வதியை மிரட்டும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாச வார்த்தைகளால் கமெண்ட் செய்யப்பட்டுள்ளது.
ஒரு கல்லூரி நிர்வாகத்தின் மிக உயரிய பொறுப்பில் உள்ளவரே, பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்கு எதிராக இதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது கல்வி வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் இந்தச் செயல் கல்லூரியில் பயிலும் மற்ற மாணவிகளிடையேயும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஆபாச கமெண்ட் குறித்த ஆதாரங்களைச் சேகரித்த மாணவி அஸ்வதி, பொறுப்பு முதல்வர் சுமிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்தார். மேலும், இந்தச் சைபர் மிரட்டல் குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் பிரசன்னாவைச் சந்தித்தும் புகார் மனு அளிக்க மாணவி திட்டமிட்டுள்ளார்.