தீபம் ஏற்றி வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், தமிழக அரசின் மேல்முறையீடு எந்த வகையில் நியாயம் ? போத்தி பாண்டியன் கேள்வி
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றிக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) மேல்முறையீடு செய்ததை நெல்லை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் போத்தி பாண்டியன் அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் கோடிக்கணக்கான இந்து மக்களின் மத உணர்வுகளைப் புறக்கணிப்பதாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்து வந்த திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இது இந்து பக்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் போத்தி பாண்டியன் இதுகுறித்து கூறும்போது :
"தமிழக அரசின் இந்த முடிவு கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வைச் சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட ஒரு சடங்குக்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற பின்னரும், அதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வது வருத்தம் அளிக்கிறது. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது போல, திருப்பரங்குன்றம் மலையிலும் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது பக்தர்களுக்கு மிகவும் புனிதமான ஒரு நிகழ்வாகும். கோயில்கள் மற்றும் பக்தர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை, இந்துக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவது ஏற்புடையது அல்ல. உடனடியாக மேல்முறையீடு செய்யும் முடிவைத் தமிழக அரசு கைவிட்டு, இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பாதுகாக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார். இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள், குறிப்பாக இந்துக்கள், முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றும் போத்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் உட்பட திருநெல்வேலி மாவட்ட பாஜகவினர் ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.