திருநெல்வேலியில் சீமான் ஆவேசம்: "தி.மு.க. தோல்விக்காக அ.தி.மு.க. வரத் தேவையில்லை; ஆட்சி முறையே மாற வேண்டும்!"
இலவசங்களே அனைத்து விலை உயர்வுக்கும் காரணம்' - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் செயல்பாடுகள், மேய்ச்சல் நிலப் பிரச்சினை, கள்ளச்சாராயம், இலவசத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆவேசமாகக் கருத்துகளைப் பதிவு செய்தார்.
நாடு முழுவதும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைகள் உள்ளன என்றும், கால்நடைகள் நம் செல்வம் என்றாலும், மேய்ச்சல் நிலங்களை அரசு பாதுகாப்பதில்லை என்றும் சீமான் குற்றம் சாட்டினார். மாநிலத்தில் பால்வளத் துறை இருந்தும், பால் ஆந்திரா உள்ளிட்ட வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதியாகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கேரளாவில் மலைகளை வெட்டி எடுக்கத் தடை விதித்து, கேரள அரசு மலை வளங்களைப் பாதுகாக்கிறது. ஆனால், இங்கு மலையை வெடி வைத்துத் தகர்க்கலாம்; குவாரியாக வெட்டிச் செல்லலாம் என்று அவர் வேதனை தெரிவித்தார். இன்று பணகுடிப் பகுதிக்கு தன்னை நுழைய விடாததற்குக் காரணமே, அந்த நிலங்கள் சபாநாயகரின் தந்தைக்கு உரியது என்பதால் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவோம் என்று உறுதியளித்தார்.
போதைப் பொருட்கள் காவல்துறைக்குத் தெரியாமல் உள்ளே வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த சீமான், அரசு காய்ச்சிச் சாராயத்தை விற்றால் அது நல்ல சாராயம் என்றும், மற்றவர்கள் விற்றால் அது கள்ளச்சாராயம் என்றும் விமர்சித்தார். கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச்சாராயச் சாவுகளுக்குப் பிறகு, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழித்திருக்க வேண்டுமே என்று அவர் கேள்வி எழுப்பினார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு ₹10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி, அதை நியாயப்படுத்த இந்த அரசு முயற்சிக்கிறது என்று சாடினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்திற்குக் காரணமானவர் சிறைக்குச் சென்று வந்த பிறகு மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார். ராமநாதபுரத்தில் பள்ளிச் சிறுமியை ஒருதலைக் காதலால் கட்டாயப்படுத்தி கொலை செய்தவரும் போதையில் தான் இருந்தார் என்றும் அவர் சங்கிலித் தொடர் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டினார். யாராவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் சாராயக் கடையை மூடுவோம் எனச் சொல்கிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஒரு லிட்டர் தாமிரபரணித் தண்ணீரை ஒரு பைசாவிற்குத் தனியார் நிறுவனங்களுக்கு இந்த அரசு விற்கிறது என்றும், இது மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது என்றும் சீமான் தெரிவித்தார். காமராஜர் காலத்தில் அரசுத் துறை அதிகாரிகள் இப்படித் தவறு செய்துவிட்டுப் பதவியில் இருக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பசுமை மின்சாரம், பசுமை வானூர்தி நிலையம், பசுமை சாலை என இயற்கையை அழித்துவிட்டுப் 'பசுமை' பெயரைச் சேர்க்கிறார்கள் என்றும் விமர்சித்தார். சென்னை தூண் நகரமாக மாறிவிட்டது; தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள். மெட்ரோ திட்டம் இந்தியா முழுவதும் தோல்விதான், இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது என்றும் அவர் வினவினார்.
ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என தான் நினைப்பதாகத் தெரிவித்த சீமான், தீமைக்கு மாற்று ஒரு தீமை அல்ல என்றும், தி.மு.க. தோல்வி பெற வேண்டும், அதற்காக அ.தி.மு.க. வரவேண்டும் என நாங்கள் கூறவில்லை என்றும் தெரிவித்தார். தி.மு.க., அ.தி.மு.க. கொடியில் இருக்கும் அண்ணா படம் தான் மாற்றமே தவிர, கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய அவர், 'திராவிடம் திருட்டுப்பயல் கூட்டம், ஏமாற்று' என்றார். இந்தி ஒழிக என்பதல்ல தன் வாதம் என்றும், தமிழ் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் என்றும், தேவைப்பட்டால் அனைத்து மொழிகளையும் கற்கலாம், விருப்ப மொழியாகத் தாய்மொழிக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், நடிகரைப் பார்க்கச் சென்று இறந்தவருக்கு அனைத்து ஆதரவும் கொடுக்கிறார்களே தவிர, மீன்பிடிக்கச் சென்று இறந்தவருக்கும் அமைச்சர்கள் சென்று ஆறுதல் கொடுக்கவில்லையே என்றும் அவர் வேதனையை வெளிப்படுத்தினார்.
இந்தியாவிலேயே அதிகக் கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு - 10 லட்சம் கோடி என்றும் அவர் தெரிவித்தார். இலவசங்களுக்கான பணத்தை மக்களிடம் இருந்து எடுத்து மக்களுக்கே கொடுக்கிறார்கள் என்றும், இலவசங்களே அனைத்து விலை உயர்வுக்கும் காரணம் என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார். மகளிர் உரிமைத் துறைக்கு ஆண்டுக்கு ₹980 கோடி செலவு செய்கிறீர்கள், அதற்குரிய பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு இலவசப் பயணம் என்றால், ஆண்களிடம் இருந்து கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறீர்கள். மின் கட்டண உயர்வு என அனைத்து உயர்வுக்கும் இலவசங்களே காரணம் என்று அவர் வலியுறுத்தினார். இந்த முறை பொங்கல் பரிசு ₹3000 முதல் ₹5000 வரை தமிழக அரசு கொடுக்கும் என்றும், பீகார் தேர்தல் வெற்றிக்குக் காரணம் பெண்களுக்கு ₹10,000 கொடுத்தது தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எனக்கு நீங்கள் ஓட்டுப் போட்டால் அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்வேன். பிரச்சனைகளைக் கேட்பதில்லை, தீர்க்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும் என்றும் அறிவித்தார். இனிமேல் தேர்தல் மாநாடுதான் எனச் சொல்லி சீமான் தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.