தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் 'எழுச்சிப் பயணம்' ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் மிகப் பெரிய அளவில் நடைபெற உள்ளது.
ராதாபுரம் தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு பாரம்பரியமாகவே ஆதரவாக இருந்து வருவதாகவும், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இந்த அரசியல் சுற்றுப்பயணம், வரவிருக்கும் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பாஜகவிற்கு நிச்சயம் வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தரும் என்றும் கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியில் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் பொதுக்கூட்டத்திற்கு பேனர்கள் வைக்க ஆளுங்கட்சியினர் மூலம் காவல்துறையினர் கடுமையான நெருக்கடி கொடுப்பதாக தமிழக பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் அசோக் தெரிவித்தார்.
மேலும் "கடந்த முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மேம்பாலத்தை திறப்பதற்காக முதலமைச்சர் வருகை தந்தபோது, தூத்துக்குடி விமான நிலையம் முதல் கன்னியாகுமரி வரை கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தொலைவிற்கு திமுக கட்சியின் கொடியும் பேனர்களும் வைக்கப்பட்டன. அதை காவல்துறை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போது பாஜக பொதுக்கூட்டத்திற்கு பேனர் வைப்பதற்கு காவல்துறை கடுமையான நெருக்கடி கொடுக்கிறது" என்று தெரிவித்தார்.
"பீஹார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிச்சயம் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் பாஜக வரக்கூடாது என்று திமுக சொல்லிக் கொண்டு திரிகிறது. ஆனால், தமிழ்நாட்டுக்குள் பாஜக எப்போதோ வந்துவிட்டது. திமுகவை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிடுவார்கள் என்று பயந்துதான், பாஜகவிற்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்தார்.