உயிரிழந்த தாய் பசுவின் உடலை நாய்களிடமிருந்து காப்பாற்ற பாச போராட்டம் நடத்திய கன்றுக்குட்டி : Warning ⚠️ This post may offend some viewers.
திருச்செந்தூர் கோவில் அருகே இறந்த நிலையில் கிடக்கும் பசு மாடு: நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் துர்நாற்றம் – பக்தர்கள் வேதனை
நாய்களிடம் இருந்து தாய் பசுவின் உடலை பாதுகாக்க பாச போராட்டம் நடத்திய கன்று குட்டி
திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கும் விதமாக, கோவில் அருகே, முக்கிய வழித்தடத்தில் இறந்த நிலையில் கிடக்கும் பசு மாட்டை அப்புறப்படுத்தாமல் திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தசரா திருவிழா முடிந்துள்ள நிலையில், தற்போது நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை புரிந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் கடற்கரை அருகே அமைந்திருக்கும் ஐயா வைகுண்டர் கோவில் அருகில் ஒரு பசு மாடு இறந்த நிலையில் கிடக்கிறது.
இறந்து கிடக்கும் பசு மாட்டைப் பார்த்தால், குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது. இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் தற்போது கடுமையான துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கடந்து செல்லக்கூடிய இந்த முக்கியப் பாதையில், துர்நாற்றம் வீசும் நிலையில் பசுமாடு பிணமாகக் கிடப்பது பக்தர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் உச்சகட்ட உருக்கமான பகுதியாக, உயிரிழந்த பசு மாட்டின் அருகில் அதன் கன்றுக்குட்டி சோகத்துடன் நின்று கொண்டிருக்கிறது.
இரண்டு நாட்களாகியும் இறந்த தாயின் உடலை விட்டுப் பிரிய மனமில்லாத அந்தக் கன்று, இறந்த உடலைக் நாய்கள் கடித்துக் குதற முயற்சிக்கும்போது, அவற்றை ஆவேசத்துடன் விரட்டி அடிப்பதைப் பார்ப்போர் கண்கலங்கச் செய்கிறது.
மாட்டின் உரிமையாளர் இரண்டு மூன்று நாட்களாகியும் தேடி வராத நிலையில், பொது சுகாதாரத்தில் அக்கறை செலுத்த வேண்டிய திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் இதுவரை இறந்த பசு மாட்டை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்களும், பக்தர்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் ஆன்மீகச் சுற்றுலாத் தலத்தின் முக்கியப் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக இறந்த மாடு கிடப்பதைத் தாமதமின்றி உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.