நெல்லையில் பசு மாட்டின் முகத்தில் கல்லை போட்டு துடிதுடிக்க கொன்ற இருவர் : வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நெல்லையில் பசு மாட்டின் முகத்தில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்: வலியால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பசுமாடு
வெளியான வீடியோவால் பெரும் பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்டம், குறிச்சி பகுதியில் குடிபோதையில் இருந்த இருவர், சாலையில் சென்ற பசு மாட்டை அடித்து, மிதித்து, முகத்தில் பெரிய கல்லை போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் செயலின் வீடியோ இணையத்தில் வெளியாகி, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் குறிச்சி பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒரு முதியவர் மற்றும் ஒரு நடுத்தர வயதுடைய நபர் ஆகிய இருவரும் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு பசு மாடு அவர்கள் மீது லேசாக முட்டுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது.
முதலில் கொடூரமாக மாட்டை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர் மாட்டை மிதித்து கீழே தள்ளியுள்ளனர்.
கீழே விழுந்த மாட்டின் முகத்தில், அங்கிருந்த பெரிய கல்லை தூக்கிப் போட்டு கொடூரமாகக் தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பசுமாடு துடிதுடித்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.
பசு மாட்டை அடித்துக் கொன்ற இந்த இருவருமே குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்தக் கொடூரச் செயலை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதன் மூலம், சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தீயாகப் பரவி, நெல்லை மக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல் துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் மிருகவதைத் தடைச் சட்டம் (Prevention of Cruelty to Animals Act) உள்ளிட்ட உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.