மு.க.ஸ்டாலின் சம்பந்திக்கு கோவில் வளாகத்தில் 30-ம் நாள் காரியம்: அதிகார துஷ்பிரயோகமா? இந்து முன்னணி கடும் கண்டனம்!
திருநெல்வேலி மாவட்டம், அரிநாயகிபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அவர்களின் தந்தைக்கு 30-வது நாள் காரிய சடங்குகள் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக, கோவில் வளாகத்தில் உள்ள பிரதான வாயிலை மறித்தும், பலிபீடம் அருகிலும் மேடை மற்றும் ஏர்கூலர் வசதியுடன் பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல்வரின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவரின் குடும்ப சடங்கிற்காக, கோவில் வளாகத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது குறித்து இந்து முன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்:
"அதிகாரத்தில் இருப்பவர்களின் துஷ்பிரயோகமாக இது தெரிகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பப் பெரியோருக்கான காரியம் மற்றும் வழிபாடுகளை இதுபோல கோவில் வளாகத்தின் முக்கியப் பகுதிகளில் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்குமா? அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்படுமா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயிலில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டும் இதுபோன்ற விசேஷ சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது பக்தர்களிடையே சலசலப்பையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அறநிலையத்துறை இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.