திமுக கவுன்சிலர் வார்டில் வேலை செய்ய 3 லட்சம் லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர் : வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக ஆட்சியில் திமுக கவுன்சிலரின் வார்டில் 3 லட்சம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் : வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மின்மாற்றி மாற்ற 3 லட்சம் லஞ்சம் கேட்ட ஊழியர் மீது புகார்
திருநெல்வேலி மாநகராட்சி 7வது வார்டின் திமுக மாமன்ற உறுப்பினராக இந்திரா மணி என்பவர் பொறுப்பு வகித்து வருகின்றார். இவரது கணவர் மணி திமுக பிரதிநிதியாக உள்ளார்.
வார்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மணி, தனது வார்டில் நடைபெறாத பணிகள் குறித்து வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் அது திமுக தலைமை அலுவலகம் வரை சென்று கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு காரணமாகியுள்ளது. எனினும், மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறார், இதனால் நெல்லை மாநகராட்சி மேயர் உட்பட பல திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், 7 வது வார்டில் கடந்த 35 ஆண்டுகளாக உள்ள பழைய டிரான்ஸ்பார்மர் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உயிர் ஆபத்திற்குள்ளாகக் கூடும் என கவலை தெரிவித்த இந்திரா மணி, பாளையங்கோட்டை சமாதானபுரம் மின் நிலைய அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
இந்த நிலையில், டிரான்ஸ்பார்மரை மாற்றி வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினால் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு திமுக பிரதிநிதி மணி கூறியதாவது:
நான் ஒரு வார்டு கவுன்சிலரின் கணவர். என்னிடம் 3 லட்சம் லஞ்சம் கேட்டால் சாதாரண மக்களிடம் எவ்வளவு கேட்பீர்கள்?
என்று வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் இல்லாமல் வேலை செய்ய முடியாது என்று கூறி மின்வாரிய ஊழியர் இடம் மாற்றம் செய்ய மறுத்து சென்றதால், சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிர் பாதுகாப்பிற்காக பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி 7வது வார்டு பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.